Friday, November 13, 2009

Synapse க்கு (Nov 15th) பிறந்தநாள் வாழ்த்துகள்"அர்ஜுன் அம்மா யாரு?" "நாலரை பால் குடுக்குறவங்க தான் அர்ஜுன் அம்மா" ஆனா நான், பால் குடிக்க மாட்டேன்னு அடம் புடிக்குற ஒரு அர்ஜுனோட அம்மா!!!!!!!!!!!!!! என்று அதிரடியாக அறிமுகப்படுத்தி கொள்ளும் ப்ரியா அக்காவின் பதிவுகளும் அதிரடியே. இவரால் சுவீடனில் ஆரம்பிக்கப்பட்ட Synapse இப்போது பெங்களூரில் வளர்ந்து கொண்டிருக்கிறது.

இது வரை ப்ரியா அக்கா எழுதியதில் எனக்கு மிக மிக பிடித்தது அவர் தந்தை பற்றி அவர் எழுதிய தந்தை மகற்கு ஆற்றும் நன்றி. நான் மிகவும் சந்தோசமாக இருந்தாலும், சோகமாக இருந்தாலும் நான் செய்ய விரும்புவது இரண்டு விஷயங்கள். இந்த பதிவை படிப்பது, மொழி படம் பார்ப்பது. எனக்கு அலுக்காத விசயங்கள் இவை. என்னை பொறுத்தவரை ராதா மோகனால் மற்றும் ஒரு படம் மொழி போல் எடுக்க முடியாது. அது போல் இவர் எத்தனை பதிவு எழுதினாலும் இந்த பதிவு போல் வராது.

அர்ஜுன் பிறந்தது பற்றியும், அவனின் மழலை மொழியையும் மிக அழகாக பதிவு செய்துள்ள அவர் இப்போது அர்ஜுன்க்கு ரெஸ்ட் கொடுத்து இருக்கிறார். கொஞ்ச நாள் கழித்து அர்ஜுனை வைத்தே அவனை பற்றி Synapse இல் எழுத வைக்கும் எண்ணம் இருக்கிறதோ என்னவோ?
ஆனால் அர்ஜுனை பற்றி அவர் எழுதிய காதல் மலரும் நீ... கருவில் முள்ளும் நீ பதிவு படித்தால் அர்ஜுனை அள்ளி கொஞ்ச தோன்றும்.

அவர் ஒரு பயண தொடர் எழுத முற்பட்டு சில பதிவுகளை மிக அருமையாகவும், சில பதிவுகளை சொதப்பியும் அவரின் கணவரிடம் மட்டும் இன்றி அவரை நம்பி அவரது பதிவை படிக்கும் சிலரிடம் நன்றாக வாங்கி கட்டி கொண்டார். குறுந்தொகையை தப்பாக எழுதி மாமனாரிடம் வாங்கி கட்டிக்கொண்ட அனுபவம் கூட அவருக்கு இருக்கிறது.

இவரின் குறும்புகளை தாங்க முடியாமல் நாங்க தவிக்க 'ராவணா' படத்தில் இருந்து அபிஷேக்பச்சன் நீக்கப்பட்டார் என்று ச.ந.கண்ணனை வம்புக்கு இழுக்க வேண்டியது, இட்லிவடையை சமத்தாக இருக்க சொல்லி அறிவுரை சொல்வது என்று இவரின் அலும்பு தாங்கல. ஹ்ம்ம் என்ன உலகமடா இது.

Salmon மீன் வறுவல், ரசமலாய் என்று போட்டோ மற்றும் அதை செய்வது பற்றிய குறிப்புகளும் போட்டார். நாங்களும் இப்படி அருமையாக இவர் சமைப்பாரா என்று வியந்து போய் இருக்க அவரின் கையால் சாப்பிட்ட அவரின் கணவரின் நண்பர் கொடுத்த கமெண்டும், அவரின் தோழி சுபா அந்த போட்டோ கூகுளில் இருந்து எடுத்தது என்ற உண்மையையும் (!?!) சொன்ன பிறகு தான் தெரிந்தது அது எல்லாம் காமெடி பதிவு என்று.

கோயில் கொஞ்சம் போர் அடித்தால் தெய்வம் வந்து வாழும் வீடு என்று நம்மளையும் பதிவு மூலம் அவங்க வீட்டிற்கே கூட்டி சென்றவர் மீந்து போன இட்லி மாவு கூட கொடுக்காமல் ஏமாற்றினார்.

அவர் பார்க்கும் ஒரே ஒரு நிகழ்ச்சி சூப்பர் சிங்கர். அதையும் பார்க்க விடாமல் IPL வந்து அவரின் உயிரை வாங்கும். டென்னிஸ் பற்றியோ, கிரிக்கெட் பற்றியோ எதுவும் தெரியாது என்றாலும் ((socket ல இருக்க வேண்டிய கேபிள் அவிழ்ந்து கிடந்தது தெரியாம டென்னிஸ் மேட்ச் டிவில தெரியலன்னு உட்கார்ந்திருந்த ஆளுங்க இவங்க) டோனி, பெடரர் பற்றி பேசி கதிரின் காதில் புகையை வரவைப்பது அவரின் பொழுதுபோக்கு. அதற்கு துணையாக ச.ந. கண்ணன் வேறு சில பதிவுகளை (டோனியை போல யாரும் இல்லன்னு) போட்டு ஏற்றி விடுவார். ஒரே ஒரு நல்ல விஷயம் விளையாட்டு பற்றி தெரியாது என்றாலும் பெடரருக்காக அய்யனாரிடம் வேண்டி அவரை ஜெயிக்க வைத்தார். அந்த விசயத்தில் பெடரரின் ரசிகையான எனக்கு மிக்க மகிழ்ச்சி.

No name yet என்று அவரின் தோழிகளை பற்றி எழுத ஆரம்பித்து அதை முடிக்காமல், அதற்கு பெயரையும் சூட்டாமல் விட்டுள்ளார். சீக்கிரம் அந்த பதிவுகளுக்கு பெயரிட்டு அதை முடிக்கட்டும். நீங்கள் எல்லோரையும் விட்டு தனியாக இருக்கும் போது இந்த பதிவுகளை படிக்காதீர்கள். உங்களை அறியாமல் கண்ணீர் வரும். மனது கனத்து விடும். அனுபவம் பேசுகிறது.

நான் கதை கேட்ட கதை, நான் எழுதிய கவிதை என்று சொந்த திறமைகள் பற்றியும் அவ்வபோது பதிவுகள் வரும். எந்த அளவு சொந்த கதைகள் சொல்றாரோ அந்த அளவு பொது நல நோக்குடன் பஸ்சில் நடந்தது, tax ஒழுங்கா கட்டுவது என்ற பதிவுகளும் வரும். அவருக்கு அது பொது நலமாக தோன்றுவது இல்லை என்றாலும் படிப்பவர்கள் நாமும் இனி இப்படி இருக்கலாமே என்று எண்ணுவோம்.

அவரின் சொந்த ஊர் பற்றிய பதிவை படித்து விட்டு நம்மள மாதிரியே இருக்காங்களே என்று நான் எண்ணியதோடு மட்டும் இல்லாமல் நம்மளால இப்படியெல்லாம் எழுத முடியுமா என்று எனக்கு தோன்றியது.

சரோஜா. தாம் தூம், நான் கடவுள், கண்டேன் காதலை என்று சினிமா பற்றிய (இதுல ஹிந்தி சினிமா பற்றி வேறு ... யாருக்கு புரிய போதுன்னு ஒரு தைரியம்) பதிவுகள் வரும். சரோஜா படத்துக்கு உதயம் தியேட்டர்ல உக்காந்து விசில் அடிக்க முடியாம சத்யம்ல பார்த்தாங்கன்னு கவலை வேற மேடம்க்கு.

வைரமுத்து, உன்னி கிருஷ்ணன், தாமரை என்று எழுதுவதோடு நிறுத்தி கொள்ளாமல் அவ்வபோது பாட்டு போட்டிகள் வைத்து நம்ம மூளைக்கு (சாரி கூகிள் ஆண்டவர்க்கு) வேலை கொடுப்பார். நாமளும் உயிரை கொடுத்து கண்டுபிடித்தால் ஒரு மிட்டாய் கூட கொடுக்க மாட்டார். மிட்டாய் கொடுக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, கூகிள் பண்ணி சொன்ன உங்களை கூகிள் ஆண்டவர் கண்ணை குத்தட்டும் என்று சாபம் வேறு கிடைக்கும்.

நகத்தை எடுத்தது, பல்லு பிடுங்கியது, போன் அட்டென்ட் பண்ண போய் கீழ விழுந்தது இதை பற்றியெல்லாம் எழுதி விட்டு ப்ரியாவிற்கு எவ்ளோ தான் வலித்தாலும், பதிவர் ப்ரியா கதிரவன் நடப்பதை எல்லாம் சுவாரஸ்யமாக வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இருந்து இருக்கிறாள், படுற அடிகளையும், ரணங்களையும் கூட ஒரு அனுபவமா பாக்குற பக்குவம் கெடைச்சுருக்கு என்று கீழ விழுந்தாலும் மீசையில மண்ணு ஒட்டலங்குற மாதிரி ஒரு ஸ்டேட்மெண்ட் வேற.

இவர் பதிவிட்டு எங்களை படுத்துவது பத்தாதென்று அவர் மாமனாரின் பிரிவுபச்சார விழாவில் பேசி அவர்களையும் படுத்த முயன்றார். ஆனால் அவர் நாத்தனார் அவர்களை காப்பாற்ற எங்களை காப்பாற்ற யாரும் வரவில்லை. ஆனால் அவரின் மாமனாருக்கு அவரின் வேலையின் மீது இருந்த ஈடுபாட்டை அழகாக குறிப்பிட்டு அவரை வாழ்த்தி எங்களையும் வாழ்த்த வைத்து நல்ல பெண்ணாக நடந்து கொண்டார்.

Marriage க்கும் XOR க்கும் என்ன தொடர்புன்னு கேட்டு மத்தவங்க குடும்பத்துல கும்மி அடிக்க முற்பட்ட இவங்களுக்கு இன்னும் ஒரு ஆசை இருக்கிறது. இவங்க தம்பி திருமணத்தை நாகர்கோவிலில் நடத்தி வர்ற மொய் பணத்தை எல்லாம் ஆட்டையை போடணும்னு.

இப்போது சிறுகதை எழுத ஆரம்பித்திருக்கும் இவர் திரு. தேசிகன் அவர்களுக்கும், ச.ந.கண்ணன் அவர்களுக்கும் (இப்படி தான் உசுப்பேத்தனும்) சவால் கொடுப்பாரா என்று பொறுத்திருந்து பார்போம்.

எல்லோரும் மன நிம்மதியுடன், உடல் நலத்துடன் வாழ வாழ்த்தும் இவர் உடல் நலத்துடனும், மன மகிழ்ச்சியுடனும் வாழ வாழ்த்துவோம்.

Synapse இன்னும் பல பிறந்தநாள்களை கொண்டாட வாழ்த்துகள்.

14 comments:

இய‌ற்கை said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் SYNAPSE & Priya

கணேஷ் said...
This comment has been removed by the author.
கணேஷ் said...

வாழ்த்துக்கள் "Synapse" ப்ரியா மேட‌ம் & ராஜ‌லெட்சுமி!!!!

உங்களுக்கு ஏன் வாழ்த்துக்கள்ன்னா, சீக்கிரமே ஒரு பதவி கெடைக்கும். அட்லீஸ்ட் கௌரவ போஸ்ட்(கொ.ப.செ?) கிடைக்கும். அதுக்கு தான் உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் :)

நாட்டுல‌ கொ.ப‌.செக்க‌ள் ரொம்ப‌ அதிக‌மாகிட்டாங்க‌ப்பா.. :):)

Princess said...

வாழ்த்துக்கள் என்னிடமிருந்தும் :D

-பதுமை.

Anonymous said...

மனம் நிறைந்த வாழ்த்துக்கள் SYNAPSE & Priya

Maddy said...

பெரிய புராணமா படிச்ச மாதிரி இல்லெ இருக்கு இங்கே! சே! ப்ரியா புராணம்!!!!!!! அவங்க துணை
முதல்வாரானால் நானும் கொஞ்சம் குளிர் காயாலான்ணு பார்த்தா முடியாது போல இருக்கே இந்த நிரந்தர கொ.ப. செ பண்றத பார்த்தா!!!

கிண்டல் பண்றத தள்ளி வட்சுட்டு சொல்றேன். ரெண்டு வருச வரலாற்றை ரத்தின சுருக்கமா அழகா சொல்லி இருக்கே ராஜ்!!

Indeed she is a natural writer with lot of humor and a great thinker. Wishing her more and more years of writing and wonderful life.

SanjaiGandhi said...

வாழ்த்துகள் ப்ரியா.. இது போல் மேட்டரே இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கும் பதிவர்களுக்கும் பதிவெழுத வாய்ப்புக் கொடுக்கும் தங்கள் திருப்பணி வாழ்க.. :)

SanjaiGandhi said...

Synapse - பாடப் புத்தகம் கொண்டு பல்கலைக் கழகம் இருக்கிறது எங்கும்... பதிவுகளைக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் இருப்பது இங்கு மட்டுமே

Roger Federer said...

Synapse - பாடப் புத்தகம் கொண்டு பல்கலைக் கழகம் இருக்கிறது எங்கும்... பதிவுகளைக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் இருப்பது இங்கு மட்டுமே

Osama BinLaden said...

Synapse - பாடப் புத்தகம் கொண்டு பல்கலைக் கழகம் இருக்கிறது எங்கும்... பதிவுகளைக் கொண்டு ஒரு பல்கலைக் கழகம் இருப்பது இங்கு மட்டுமே

ப்ரியா said...

என்னுடைய பதிவு ஆரம்பித்து இரண்டாண்டுகள் ஆவதை எனக்கு ஞாபகப்படுத்தியதே Raji தான்.
அதும் இல்லாம, இப்டி ஒரு பதிவு போட்டு, 'சைடு பார் முழுக்க லிங்க் குடுத்து' என்று அசத்தியதெல்லாம், எனக்கு ரொம்பவே அதிகம் :-).
என்னுடைய பதிவுகளையும் கமெண்ட்ஸ்களையும் கூட நுணுக்கமாக படித்து quote செய்திருப்பதெல்லாம் பார்க்கும் போது, சந்தோஷமா இருக்கு ன்னு ஒத்துக்கலைன்னா நான் பொய் சொல்றதா தான் அர்த்தம்.

ராஜிக்கும் இங்க வாழ்த்து சொன்ன எல்லாருக்கும் நன்றி.

விக்னேஷ்வரி said...

நல்ல அறிமுகம். அதோடு நல்ல நகைச்சுவையோடு அவரின் பதிவு பற்றிய விமர்சனம்.

அபி அப்பா said...

பொதுவாவே நவம்பர் 13 ல் பிறந்தவங்க எல்லாருமே அப்படித்தான் ராஜி! வாழ்த்துக்க்கள் பிரியா!

Sangkavi said...

வாழ்த்துக்கள்..........