Tuesday, June 30, 2009

Children of Heaven - இந்த ஈரானிய படத்தை பார்க்கும் வாய்ப்பு இப்போது தான் கிடைத்தது. நல்ல படம் என்று எனது நண்பர் ஒருவர் சொல்லி இதை பார்த்தேன். இந்த மாதிரி மிக அழகாக ஒரு படம் எடுக்க முடியுமா என்று நான் வியந்து போய் அமர்ந்திருக்கிறேன்.

இந்த படத்தின் கதையை ஒரே வரியில் சொல்ல வேண்டுமானால், 9 வயது சிறுவன் ஒருவன் தனது தங்கையின் ஷூ வை தொலைத்து விட்டு வீட்டின் ஏழ்மை சுழ்நிலை காரணமாக பெற்றோரிடம் சொல்ல முடியாமல் தங்கையுடன் சேர்ந்து எப்பிடி சமாளிக்கிறான், எப்பிடி தன் தங்கைக்கு ஷூ வாங்க முயற்சிக்கிறான் என்பது தான்.

அந்த படத்தின் உயிர் நாடியே அந்த இரு குட்டீஸ் தான் என்று நான் சொல்ல நினைக்கையில் அந்த படத்தின் ஒவ்வொரு காட்சிகளாக என் கண்முன் வந்து எதை விடுவது மற்றும் எதை சொல்வது என்று யோசிக்க வைத்து ஒட்டு மொத்தமாக மிகவும் அருமையான கதை என்று சொல்ல வைக்கிறது.

அந்த இரு குட்டீசும் மிக அழகாக நடித்திருக்கிறார்கள். தங்கையின் ஷூ வை தொலைத்து விட்டு பெற்றோரிடம் சொல்ல வேண்டாம் என்று தங்கைக்கு பென்சில் கொடுப்பதாகட்டும், ஷூ தொலைத்து விட்ட சோகத்திலும் சோப்பு நுரையை பார்த்த உடன் அதை ஊதி விளையாடுவது ஆகட்டும், காட்சிகள் மிக அழகாக, இயல்பாக இருக்கின்றன. இப்படி சொல்ல ஆரம்பித்தால் அனைத்து காட்சிகளையும் விவரிக்க வேண்டி இருக்கும்.

விஜய், பேரரசு எல்லோரும் இந்த படத்தை பார்க்க வேண்டும். ஏற்கனவே பார்த்திருந்தால் கண்டிப்பாக அவர்கள் இப்படி நடிக்கவோ, இல்லை இயக்கவோ மாட்டார்கள். விஜய் ரசிகர்கள் இதை படித்து விட்டு எனக்கு ஆட்டோ அனுப்ப வேண்டாம். ஆட்டோவில் வருபவர்களிடம் இந்த படத்தை காண்பித்தால், கண்டிப்பாக திரும்பி வந்து உங்களை தான் அடிப்பார்கள். அப்பிடி ஒரு அழகு படம்.

இந்த படம் பார்த்து முடித்தவுடன் இதன் நினைவுகள் நம்மையும் அறியாமல் நம் மனதில் வந்து அமர்ந்து கொள்ளும் என்பதில் சந்தேகம் வேண்டாம். இந்த படத்தை இத்தனை நாட்களாக பார்க்காமல் விட்டு விட்டோமே என்று நான் மிகவும் கவலைப்பட்டேன். நான் கவலையாய் இருக்கும் போதோ இல்லை சந்தோசமாக இருக்கும் போது, நான் பார்க்க வேண்டிய படம் இது தான் என்று முடிவெடுத்து விட்டேன். இந்த படத்தை பார்க்காதவர்கள் தயவு செய்து பாருங்கள். ஒரு நல்ல படத்தை விட்டு விடாதீர்கள். பார்க்கும் எல்லோரிடமும் இதை தான் சொல்லி கொண்டிருக்கிறேன்.

----------------------------------------------------------------------------------

போன வாரம் ஞாயிற்றுக்கிழமை மிக மோசமாக இருந்துதுன்னு சாமிகிட்ட சொன்னேன்ல. அதான் இந்த வாரம் சாமி அருள் புரிந்து விட்டார். நான் இருக்குற இடத்துல இருந்து பக்கத்துல ஒரு கோவில் இருக்கு (ஒரு 40 மைல் தான்). என்னோடு வேலை பார்க்கிற மற்றும் சில அபார்ட்மென்ட் நண்பர்களும் கோவிலுக்கு சென்றோம். ஏதோ கும்பாபிஷேகம் என்ற அளவில் மட்டும் கேள்வி பட்டு அங்கு சென்றால், அப்பப்பா எவ்வளவு கூட்டம். எத்தனை இந்தியர்கள். நம்ம ஊரு மக்களை பார்த்தாலே ஒரே ஜாலி தான். மதியம் 11 மணிக்கு ஆரம்பித்த பூஜை முடிய மூன்று மணி ஆகி விட்டது. மிகவும் மன நிறைவுடன் இருக்கிறேன்.----------------------------------------------------------------------------------

இந்த பதிவிட்ட சஞ்சய்க்கும், வாழ்த்திய அனைவருக்கும் நன்றி. பிறந்தநாள் அன்று இனிப்பு சாப்பிட சொல்லி எனது அக்காவும், நண்பர் ஒருவரும் மிக அக்கறையுடன் சொன்னார்கள்.ஆனால் இந்த பல்வலி பாடாய் படுத்துகிறது. சாப்பிடவே முடியவில்லை. அவர்களின் பேச்சை அடுத்த பிறந்த நாளிலாவது கேட்கிறேன் :)

ஆபீஸில் நான் "ரொம்ப பல் வலிக்குது. சாப்பிட முடியல. என்ன பண்றது. எரிச்சலா இருக்கு. பசிக்குது"

நண்பர் ஒருவர் "கண்ணை மூடிக்கோ"

"ஏன்"

"ஒரே குத்து. பல் வந்துடும். வலியே இருக்காது"

"பொக்கவாய் ஆக்கலாம்னு ஐடியாவா?"

"சரி, இடுக்கி இருந்த பிடிங்கிடலாம். அதுவும் நீயே பண்ணிக்கோ"

"அப்பிடியே எதையாவது சேர்த்து பிடிங்கிட்டேன்னா பேச முடியாம கொஞ்ச நாள் கஷ்டப்படணும்"

"அது தான் எங்களுக்கு வேணும். உன் தொல்லை தாங்கல. பாரு இப்போ கூட இந்த வலியோட எத்தன பேசுற"

"ராஜி இல்லனா தான் அவ அருமை தெரியும். பேசுறது ஒரு கலை. எல்லோருக்கும் வராது. அதுனால குறை சொல்லாதீங்க"

பின்ன என்ன மானம் ரோசம்லாம் பார்த்து பேசாம இருக்க முடியுமா?

விட்டு தள்ளிட்டு பல்லு வலிக்கிற பக்கம் தாடைய பிடிச்சிட்டு பேச ஆரம்பிச்சாச்சு.

Thursday, June 25, 2009

நன்றி கடன்

என் கல்லூரி தோழிகள் எல்லோரும் பெரிய படிப்ஸ். அதுங்க கூட நான் எப்பிடி ஜாயின்ட் அடிச்சேன்னு எனக்கு தெரியல. அதுலயும் ஒருத்தி இருக்கிறா கிர்த்திகான்னு, ரேங்க் ஹோல்டர். அவ ரேங்க் ஹோல்டர் ஆனதுக்கு கூட அவ்வளவு சந்தோஷ படல. நானும் அவளும் வேற வேற டிபார்ட்மென்ட்ன்னு தான் அவளுக்கு சந்தோசம். அவ ECE, நான் IT. சிலபஸ் வந்த உடனே நான் பார்க்கிற முதல் வேலை, ECE க்கும் IT க்கும் ஏதாவது common paper இருக்கான்னு தான். ஏன்னா மேடம் ஒரு வரி விடாம படிச்சி நமக்கு கதை சொல்லிடுவாங்க. நாம அந்த கதைய கேட்டுட்டு போய் எங்க dept ல இருக்குற பொண்ணுங்க கிட்ட கதைய விடுவோம்ல. அவ சொல்லி குடுத்தா நாம அந்த சப்ஜெக்ட்ல கண்டிப்பா 80% வாங்கிடுவோம். ஆனா நமக்கு தான் நம்ம லக் நமக்கு முன்னாடி போய் நிக்குமே. ஒரு மூணு பேப்பர் தான் common ஆ வந்துச்சு. எவ்வளவு பாவம் நான்.

அவளுடைய bed எனக்கு ரொம்ப பிடிக்கும். அவ bed ல படுத்துகிட்டு அவள கிண்டல் பண்ணுற சுகம் இருக்கே அது தனி சுகம். நான் ஹாஸ்டலில் இருக்கும் நேரங்களில் முக்கால்வாசி நேரம் அவளுடைய bed இல் படுத்துக்கொண்டு அவளை கிண்டல் பண்ணி கொண்டோ இல்லை படித்து கொண்டோ இருப்பேன். சத்தியமா பாட புத்தகம் இல்லங்க. நமக்கு ராஜேஷ் குமார், சுஜாதா, வைரமுத்து இப்படிங்கற பேரு தான் நல்லா தெரியும்.

அவளும் என் பக்கத்துல உட்கார்ந்து படிச்சிட்டு இருப்பா. அவ கைல பாட புத்தகம் தான்னு தனியாலாம் சொல்ல மாட்டேன். அவ நமக்கு புரியாத மாதிரி Denis Ritchie, Kenneth Thompson அப்பிடின்னு பேசி நம்ம வயித்தெரிச்சல கொட்டிப்பா. அவ படுக்கணும்னு நினைச்சா கூட முடியாது. நாங்க தான் அவ bed ல ஒய்யாரமா படுத்துகிட்டு படிச்சிட்டு இருப்போம்ல. அவளுக்கு ரொம்ப நல்ல மனசு. நானா எழுந்துரிச்சு போகுற வரைக்கும் எழுந்திரினு சொல்லாம ரொம்ப சின்சியரா படிப்பா.

ஆனா மேடம் சூப்பரா கவிதை எழுதுவா. ரொம்ப செலக்டிவா ஸ்டோரி புக்ஸ் படிப்பா. அதுவும் செமஸ்டர் ஆரம்பிக்கும் போது முதல் ஒரு மாசம் தான். அப்புறம் பாட புத்தகம் தான். அவளுக்கும் எனக்கும் இருக்குற ஒரே ஒற்றுமை என்னனா நாங்க ரெண்டு பேரும் ரமணி சந்திரன் புக் பார்த்தாலே தெறிச்சு ஓடிடுவோம். எங்க காலேஜ்ல ரமணி சந்திரன்னா உயிரை விடுற நெறைய பேரு இருக்காங்க. ஆனா நாங்க அந்த புக் பார்த்தாலே அந்த இடத்துல இருந்து தெறிச்சுடுவோம். இல்லனா அந்த இடத்துல அந்த புக் வைச்சுருக்கவங்களுக்கும் எங்களுக்கும் ஒரு சின்ன சண்டை வந்து விடும்.

அவள் மற்றவர்களிடம் இதை பற்றி கோவமாக பேசும் போது எனக்கு கொஞ்சம் ஆச்சரியமாக கூட இருக்கும். ஆனா அப்போ வேற யாராவது சப்ஜெக்ட் பத்தி பேசுனா அவளோட கவனம் படிப்பு பத்தி திரும்பிடும். நான் எப்போதும் சொல்லுவேன் "உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்"

எப்பிடியோ நானும் நாலு வருசமும் அவ உயிரை வாங்கிட்டு வந்துட்டேன். இப்போ அவளும் நம்மள மாதிரி software ல தான் குப்பை கொட்டிட்டு இருக்கா. இப்போவும் அவள பார்க்கிறப்போ, இல்ல பேசுறப்போ அவள கிண்டல் பண்ணாம விடுறது இல்ல. ஆனாலும் எனக்கு ஒரு வருத்தம். அவளும் நானும் ஒரே ஆபிஸ்ல இல்ல குறைஞ்சது ஒரே domain ல இருந்திருந்த நான் கவலையே இல்லாமா ஜாலியா என் வாழ்க்கைய என்ஜாய் பண்ணுவேன். அவ என் வேலைய செஞ்சு கொடுத்துருப்பா. பாருங்க இப்போவும் நான் தான் பாவம்.

நான் அவகிட்ட எப்போதும் சொல்ற விஷயம் என்னனா, அவ சம்பளத்துல நாலுல ஒரு பாதி எனக்கு வர வேண்டியதுன்னு. ஏன்னு கேட்குறீங்களா, அவ bed ல படுத்துக்கிட்டு அவள தூங்க விடாம பண்ணியதுனால தானே அந்த மேடம் இன்னும் நெறைய படிச்சு ரேங்க் ஹோல்டர் ஆகி, இந்த வேலைலாம் கிடைச்சது.

அந்த நன்றி கடன் இருக்கணும்ல. கொஞ்சம் கூட அந்த நன்றி கடனே இல்ல. என்ன உலகமடா சாமி. இத படிசிட்டாவது எனக்கு அவ பணம் டிரான்ஸ்பர் பண்ணட்டும். பார்க்கலாம்.

இத நான் சொன்ன உடனே அவ சொன்ன டயலாக் என்ன தெரியுமா. இப்படியெல்லாம் கேடி தனமா நீ யோசிக்கிறியே உன்னை எல்லாம் அப்பிடியே படைச்சிருக்க முடியாது. உட்கார்ந்து செஞ்சு இருக்கணும்.

Wednesday, June 24, 2009

வெறுமை

ஏதோ வெள்ளிக்கிழமை காலையில் ஆரம்பித்த வெறுமை இன்று வரை தொடர்கிறது. வெள்ளிக்கிழமை ஆபீஸில் பெரிதாக ஆணியும் இல்லை. மதியம் எனக்கு பிடித்த சாண்ட்விட்ச் சாப்பிடலாம் என்று லஞ்சுக்கு வெளியே சென்றாலும் சாப்பிட ஏனோ பிடிக்கவில்லை. வெள்ளிக்கிழமை இரவு சனி, ஞாயிறு என்ன பண்ணலாம் என்று யோசித்து யோசித்து மண்டை காய்ந்து தூங்கி விட்டேன்.

சனிக்கிழமை காலை 6 மணிக்கு போன் செய்து எழுப்பி விட்ட எங்க அம்மா வாழ்க. அதுவும் போன் செய்து எழுப்பி விட்டு விட்டு "தூங்குறியமா தூங்கு தூங்கு. நான் அப்புறம் பேசுறேன்னு" வச்சதுக்கு பதிலா வேற நாலு வார்த்தை பேசி இருந்த மனசு கொஞ்சம் சாந்தமாய் இருந்திருக்கும்.

என்ன பண்ணலாம்னு படுக்கையில இப்பிடி அப்பிடி திரும்பி திரும்பி படுத்தப்போ அக்கா நியாபகம் வந்தாச்சு. ஒரு பதிவும் போட்டாச்சு. பொழுது போகலன்னு நான் நினைச்சது எப்பிடி தான் நம்ம மக்களுக்கு தெரியுமோ. சஞ்சய், நாமக்கல் சிபி, தமிழ் பிரியன், வெட்டிப்பயல் பாலாஜி எல்லோரும் அவங்க அவங்க குடும்பத்தோட வந்து கும்மி அடிச்சிட்டு போயாச்சு. அவங்கள கண்காணிக்கவே சனிக்கிழமை பாதி நாள் காலி. கும்மி அடிச்சாலும் நம்ம பொழுது கொஞ்சம் நல்லாவே.

ஒரு வழியா இந்த களேபரம் முடிஞ்சு சரி காலையில இருந்து ஒண்ணுமே சாப்பிடுல, ஏதாவது செய்யலாம்னு நினைத்தேன். ஆனா நானே செஞ்சு சாப்பிடுற அந்த கொடுமையான சாப்பாட்ட நினைச்சு சோகமா இருந்தேன். என்னுடன் வேலை செய்யும் நண்பர் ஒருவரிடம் இருந்து லஞ்சுக்கு வர சொல்லி அழைப்பு. கூப்பிட்டு ஓசில சாப்பாடு அதுவும் ஒரு சூப்பர் சாப்பாடு போடுறேன்னு சொன்னாங்க, போகாம விட்டுடுவோமா. போய் ஏதோ என்னால முடிஞ்ச அளவு நல்லா சாப்பிட்டு, கொஞ்சம் நேரம் cards விளையாடிட்டு கிளம்பலாம்னு நினைச்சா, ஏதாவது படம் பார்க்கலாம்னு சொன்னாங்க.

சரி என்று "ஆண் பாவம்" "அரங்கேற்ற வேளை" பார்த்தோம். மிக சந்தோசமாக என்ஜாய் பண்ணி பார்த்தோம். அப்புறம் என்ன டின்னர் போட்டே ஆகணும்ல. போட்டாங்க. இன்னொரு முறை நம்மள லஞ்சுக்கு கூப்பிடுவாங்க?

வீட்டுக்கு வர மனசே இல்லாம வந்து சேர்ந்தேன். ஒரு 2 மணிக்கு படுத்தாச்சு. ஞாயிற்றுக்கிழமை காலையில் (??) ஒரு 11.30 மணிக்கு எழுந்தாச்சு. முதல் நாள் எங்க அம்மாகிட்ட பேசுன பேச்சுல அவங்க போன் பண்ணவே இல்ல (நம்ம அம்மா தானே நாம திட்டாம யாரு திட்டுவா). ஆரம்பிச்சது இம்சை அங்க தான். தூக்கம் வரல, தோழிகளுக்கு போன் பண்ண பிடிக்கல. அப்புறம் என்ன 12 மணிக்கு blog படிக்க ஆரம்பிச்சேன். ஆயில்யன், நர்சிம், சந்தனமுல்லை, தமிழ் பிரியன் blog அப்பிடின்னு பொழுது கொஞ்சம் போச்சு.

சரி படமாவது பார்க்கலாம்னு வசூல் ராஜா எம்.பி.பி.எஸ் பார்த்தேன். எப்போதும் மிக சந்தோசமாக பார்க்கும் அந்த படத்தை ஏதோ மிக சோகமான படம் போல பார்த்து முடித்தேன். மொழி படம் பார்க்கலாமா என்று யோசித்தேன். இருந்த கடுப்புல படம் பார்த்து அழுதுட கூடாதேன்னு அந்த ஐடியாவ விட்டுட்டேன்.

அப்புறம் மீதி இருந்த ஞாயிற்றுக்கிழமை, என் கண் முன்னே நின்று பயமுறுத்தியது. மிகவும் கஷ்டப்பட்டு தள்ளினேன்.இனி இன்னும் ஒரு ஞாயிற்றுக்கிழமை இது போன்று அமைய கூடாது என்று சாமிகிட்ட சொல்லி வச்சேன்.

இந்த வாரமோ ஆபீஸ்ல நிறைய ஆணி. எதை பற்றியும் யோசிக்க நேரம் இல்லை. ஆனாலும் அனைத்தையும் மீறி ஒரு வெறுமை, ஒரு எரிச்சல். யாரோடும் ஒழுங்காக பேச கூட பிடிக்கவில்லை.ஆன்லைன்ல வர்ற friends கிட்ட கூட ஒழுங்கா பேசுறது இல்ல. என்னைக்கு என்னை தூக்கி போட்டு (ரொம்ப கஷ்டம் தான்) மிதிக்க போறாங்களோ தெரியல.

ஆனா இதுக்கு நடுவுல அப்பபோ நம்மள கொஞ்சம் பேரு சிரிக்க வச்சாங்க.

"அதான் சினிமாவே அதன் உபயோகங்களையெல்லாம் கோனார் நோட்ஸ் போட்டு சொல்லிக் கொடுத்து விடுகிறதே!!" அப்பிடின்னு ஒரு பதிவுல சந்தனமுல்லை.

//ஆயில்யன் said... ங கேள்விப்பட்டிருக்கேன் இது //ஞே// கொஞ்சம் வித்தியாசமால்ல இருக்கு :) என்ன பாஸ், ஆச்சி சாப்பாட்டு விஷயத்தை பத்தி நடுவுல போட்டு இருக்காங்க, கண்டுக்காம போயிருக்கீங்க.//
அப்பிடின்னு ஒரு comment ல அமிர்தவர்ஷினி அம்மா.

//நான் சோற்று பண்டாரம் அதனாலோ தின்பதில் எப்போதும் ஒரு ஆர்வம் முட்டும்/
முட்ட முந்துவது பந்தியா இல்லை தொந்தியா பாஸ் ???????//
ஆயில்யன் பண்ணுன கொடுமைக்கு அமிர்தவர்ஷினி அம்மா கொடுத்த பதிலடி. இப்படி இன்னும் கொஞ்சம் சொல்லலாம்.

நேற்று இந்தியன் ஹோட்டல் போய் நாக்குக்கு ருசியா ஏதாவது சாப்பிடலாம் என்று போனா, ஹோட்டல் செவ்வாய்க்கிழமை இல்லையாம். அப்புறம் என்ன வேற ஹோட்டல்க்கு போய் சப்பாத்தி தான்.

நேற்று முத்துச்சரத்தில் இந்த பதிவை படித்து விட்டு இப்போது வரை நான் அதை பற்றி தான் யோசித்து கொண்டிருக்கிறேன். தனியார் பள்ளிகளில் இந்த மாதிரி நிறைய நடக்கின்றன. ஆனால் நான் பார்த்த ஆசிரியர்கள் எல்லாம் அப்பிடி இல்லை. அதுவரை நலமே.

எனது அப்பா ஒரு ஆசிரியர் என்பதாலோ என்னவோ எனக்கு சிறு வயதில் இருந்தே ஆசிரியர்கள் மேல் ஒரு பாசம் கலந்த மரியாதை உண்டு. எனது அண்ணன் திருமணத்தின் போது தாம்பூலம் கொடுப்பதற்காக அடிக்கப்பட்ட பைகளையும், சாக்லேட்களையும் எங்க அப்பா, அவங்க பள்ளிகூட பிள்ளைகளுக்காக தனியாக எடுத்து வைத்தது எனக்கு நியாபகம் வந்தது.

எனது ஒரு டிரஸ் கூட வீணாகாமல் எனது தந்தையின் பள்ளியில் படிக்கும் பிள்ளைகளுக்கு சென்றடையும். எனது அப்பாவின் நண்பர்களும் எதையும் எதிர்ப்பார்க்காமல் இந்த மாதிரி நிறைய செய்வார்கள். இந்த மாதிரி ஆசிரியர்கள் தான் கிராமத்து பள்ளிகளுக்கு கண்டிப்பாக தேவை. எனது அப்பாவின் உடல் நலத்தை பார்த்து வேலையை விட்டுவிட சொல்லி நானும் எனது அண்ணாவும் பலமுறை சொல்லி உள்ளோம். ஆனால் பள்ளிக்கு போனா தான் இன்னும் நல்லா இருப்பாங்களோன்னு எனக்கு தோன்றும்.

இன்னும் இரண்டு நாட்கள் ஆபீஸ்க்கு போகணுமே என்ற கவலை வேறு. இந்த வார இறுதியாவது நன்றாக இருக்க வேண்டும் என்று நினைத்து கொண்டே இதை டைப் செய்து கொண்டிருக்கும் போது எனது laptop hang ஆகி விட்டது. ஹ்ம்ம் எல்லாம் நம்ம நேரம். லேப்டாப் சரியாகி நான் இந்த வரியை டைப் செய்யும் போது ஒரு மணி நேரம் ஓடி விட்டது.
இந்த
வார இறுதியையும் எனது மனதிற்கு நெருங்கிய ஒருவரையும் எதிர்நோக்கி .......

Saturday, June 20, 2009

என் பிரியமான அக்கா...

கடவுளால் ஆசிர்வதிக்க பட்டவள்னு எங்க அப்பா, அம்மா, அண்ணா பத்தி மட்டும் சொல்லிட்டேன். அதுனால கடவுளே என் கனவுல வந்து நிஜமா உனக்கு நான் வேற யாரையும் கொடுக்கலையான்னு சண்டை போட்டார். அப்புறம் தான் இந்த மரமண்டைக்கு உறைத்தது. இன்னும் நிறைய பேரை எனக்காக கொடுத்து இருந்தாலும் அதில் மிக முக்கியமான ஒரு உறவை சொல்லாமல் இருக்க முடியவில்லை.

அண்ணனின் பாசம் மிக மிக அருமையானது. எனக்கும் எனது அண்ணனுக்குமான பாசத்தையும், புரிதலையும் பார்த்து பொறாமை கொள்ளும் எனது தோழிகள் சிலர் இன்றும் இருக்கிறார்கள். அந்த அளவு என் மீது பாசத்தை கொட்டி என்னை என் வழியில் நடக்க விட்டு, அதற்கு ஒரு உறுதுணையாய் நிற்கும் எனது அண்ணனை பார்த்தால் யாருக்கு தான் பொறாமை கொள்ள தோன்றாது.

என்னை பொறுத்த வரை இப்போது கடவுளே வந்து கேட்டாலும் எனது பெற்றோர் தான் எனக்கு எல்லாமே. அப்புறம் தான் கடவுளே. எனக்கு என்ன வேண்டும் என்று கடவுளை விட என் பெற்றோருக்கு நன்றாக தெரியும் என்பது எனது நம்பிக்கை.

நான் கல்லூரியில் சேர்ந்த பிறகு எனது தோழிகளுக்கும், அவர்களின் அக்காவிற்கும் இருக்கும் பாசத்தை பார்த்து நமக்கு ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்குமோ என்று தோன்றும். அவர்கள் தோழிகள் போல் பழகி கொள்வதை பார்த்து எனக்கு அக்கா இருந்திருந்தால் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்து பார்த்ததுண்டு.

சிறு வயதில் என் அண்ணன் செய்த அத்தனையும் எனக்காக அவள் செய்திருப்பாள். என்னோடு விளையாடி இருப்பாள், பள்ளிக்கோ கடைக்கோ பொறுப்பாக கூட்டி சென்றிருப்பாள், மிகவும் பொறுப்பாக கவனித்து கொண்டிருப்பாள், தனக்கானதையும் என்னிடம் கொடுத்து சந்தோஷ பட்டிருப்பாள், அவளால் இன்னும் ஒரு நாலைந்து அக்காக்கள் கிடைத்து இருப்பார்கள். இப்படியெல்லாம் நடந்து இருக்க வாய்ப்புகள் மிக அதிகம் நமக்கு ஒரு அக்கா இருந்திருந்தால் என்று நினைத்து கொள்வேன். ஆனால் இதுவெல்லாம் அக்கா இருந்தால் கண்டிப்பாக நடந்திருக்குமா என்று ஒரு ஐயம் வரும்.

ஆனால் ஒரு உண்மை எப்போதும் என்னை பார்த்து ஒரு கேள்வி கேட்கும். நீ மனம் வாடி நின்றால் ஒரு வயதிற்கு பின் அப்பாவும் அண்ணாவும் நமது கலாச்சாரத்தின் படி பக்கத்தில் நின்று ஆறுதல் சொல்ல முடியுமே தவிர அரவணைத்து ஆறுதல் சொல்ல முடியாது. பெற்ற அப்பாவும், கூட பிறந்த அண்ணாவும் நமது துயரத்தை நினைத்து ரத்த கண்ணீர் வடித்தாலும் அவர்களால் இந்த கலாச்சாரத்தின் விதியை மீற முடியாது. ஆம் எத்தனை உண்மை. ஆனால் அம்மாவோ, அக்காவோ நம்மை அரவணைத்து ஆறுதல் சொல்லும் போதே, ஏதோ நமது சுமையை நாம் இறக்கி வைத்து விட்டது போல தோன்றும்.

இது மட்டும் இல்லாமல் அப்பா- மகள் உறவிலோ, அண்ணன் - தங்கை உறவிலோ பரிமாறி கொள்ள இயலாத சில விஷயங்கள் இருக்கும். ஆனால் அம்மா - மகள், அக்கா - தங்கை உறவில் ஒளிவு மறைவின்றி இருக்க முடியும் என்றே எனக்கு தோன்றும். எந்த சந்தோசம் வந்தாலும் பகிர்ந்து கொள்ள, சோகம் வந்தால் நம்மை தூக்கி நிறுத்த, என்னோடு விளையாட, என்னோடு அவளின் வாழ்கையை பகிர்ந்து கொள்ள, இன்னும் பல காரணங்களுக்காக எனக்கு ஒரு அக்கா இருந்தால் நன்றாக இருக்குமோ என்று யோசிப்பது உண்டு. இன்னும் சொல்ல போனால், எனக்கு மற்றும் ஒரு தாயாக இருந்திருப்பாளோ என்று எனக்கு தோன்றுவது உண்டு.

கல்லூரியிலும், வேலை பார்க்கும் இடத்திலும் என்னை விட வயதில் மூத்தவரை பார்த்திருந்தாலும், அவர்களை அக்கா என்று அழைத்திருந்தாலும், என்னோடு பல வருடங்கள் கூட இருந்திருந்தாலும், ஏனோ எனக்கு எனது அக்கா என்று சொல்லிக்கொள்ள தோன்றியது இல்லை.

ஆனால் சென்ற ஆண்டில் எனக்கு அறிமுகமாகி மிக குறுகிய காலத்திலேயே அக்கா என உரிமை கொள்ள வைத்திருக்கிறார். எனது அக்கா என்று பெருமைப்படும் நான், அவரின் பக்குவமான பாசத்தை பார்த்து, அக்கா - தங்கை என்றால் இப்படி தான் இருந்திருக்குமோ என்ற எண்ணத்தை விட்டு விட்டேன்.

நம்மோடு ஓடி விளையாடினால் தான் அக்கா, நமக்காக என்ன வேண்டுமானாலும் செய்ய கூடியவள் தான் அக்கா, நாம் கேட்பதை வாங்கி கொடுப்பவள் தான் அக்கா, இன்னும் இன்னும் பல செய்ய கூடியவள் தான் அக்கா என்ற எண்ணத்தை தூள் தூளாக நொறுக்கி பக்குவமான பாசம் மட்டும் போதும் அதுவே உனது மீதான அக்கறை, கவனிப்பு எல்லாவற்றையும் கொண்டு வந்து விடும் என்று புரிய வைத்தவள்.

நான் பலமுறை பக்குவம் இல்லாமல் பாசத்தை கொட்டினாலும் அவளின் பக்குவத்தால் என் பாசத்தை இரட்டிப்பாகி விடுவாள். பக்கத்தில் இல்லை என்றாலும் நமது தூரம் தூரமில்லை என்று உணர்த்தி கொண்டிருப்பவள். நான் பேச நினைப்பது அத்தனையும் பேச உரிமை கொடுத்து இருப்பவள்.

அவளின் பல கோரிக்கைகளை நான் செவி மடுத்தது கூட இல்லை. என்ன சொன்னாலும் அதற்கு ஒரு பதிலை வைத்து கொண்டு அவளை பேச விடாமல் செய்து இருக்கிறேன். அவளின் இந்த அமைதி கூட என் நன்மைக்காக தான் இருக்கும்.

எனது நன்மைக்காக ஏதாவது அவள் சொல்லும் போது அவள் மீது தேவை இல்லாமல் கோவம் சில நிமிடங்கள் வந்து போகும். நான் என்ன சொன்னாலும் இதுவரை அவள் கோவப்பட்டு நான் பார்த்து இல்லை. அவளின் பாசம் அத்தனை பக்குவமானது.

எனது பாசத்தை புரிந்து கொண்டு, எனது கோரிக்கைகளுக்கு செவி மடுப்பவள். அவளின் வாழ்கையில் priorities வேற இருந்தாலும் என்னை விட்டு கொடுக்காமல் பார்த்து கொண்டிருப்பவள். இன்னும் சொல்லி கொண்டே போகலாம்.

இத்தனை முக்கியத்துவும் வாய்ந்த ஒரு உறவை சொல்ல மறந்த என்னிடம் கடவுள் சண்டை போடாமல் என்ன செய்வார்.இத்தனையும் எனக்காக கொடுத்து என்னிடம் இன்னொரு அம்மாவாக அன்பை காட்டி கொண்டிருக்கும் எனது பிரியமான அக்காவிற்கு இந்த பதிவு சமர்ப்பணம்.

தேவதையே,

"மறுபிறவி உண்டென்றால் இந்த தாய்க்கோ, மகளுக்கோ மகனாக வேண்டும்" என்ற வரிகளை கேட்கும் போதெல்லாம் மறுபிறவி உண்டென்றால் இந்த மூவரில் ஒருவருக்கு மகளாக வேண்டும் என்று தோன்றும். அந்த மூன்று பேர் - எனது அம்மா, சித்தி மற்றும் நீ.

Wednesday, June 17, 2009

போன பதிவு தல சொல்லி, இந்த பதிவு தலைமை பத்தி

இந்திய அணியின் தோல்விக்கு பிறகு ஏனோ தோனியை பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது. ஆனால் ஏனோ பிறகு எழுதலாம் என்று தள்ளி வைத்து விட்டேன். திடீரென்று ஏதோ மனதிற்குள் ஒரு மின்னல் அடிக்க ச.ந.கண்ணன் பதிவை பார்த்தால் அங்கு நான் நினைத்தது போல் தோனியை பற்றிய பதிவு.

சில வருடங்களுக்கு முன்பு வரை சிறந்த தலைமை யாருடையது என்று என்னை கேட்டால் சிறிதும் யோசிக்காமல் அசாருதீன் என்பேன். எனக்கு ஏனோ அசாருதீன் தலைமை மிகவும் பிடிக்கும். ஆனால் அசாருதீன் செய்த தவறு என் மனதை உறுத்தி கொண்டே இருக்கும். தோனி வந்த பிறகு அசாருதீன் என் நியாபகத்தில் இருப்பதில்லை.

ஐ.பி.எல் போதே தோனி மீது கொண்ட பாசத்தால் எனக்கு தெரிந்த நிறைய பேர் சென்னை அணி ஜெயிக்க வேண்டும் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் ஹைய்டன், ரெய்னா ஆட்டத்தை கண்டு பெருமை கொள்வதற்கு பதில் சென்னை அணியின் பீல்டிங் மற்றும் தோனியின் தலைமையை பார்த்து நான் நொந்து போய் விட்டேன். எனக்கு ஏனோ தோனி முழு மனதாக விளையடவில்லையோ என்று தோன்றியது. என்ன தான் ஊர் பாசம் இருந்தாலும் தோனி அணி கோப்பையை வென்று விடுமோ, அவர்கள் அதற்கு தகுதி இல்லையே என்று தான் எனக்கு தோன்றியது. ஏன் என்றால் ஹெய்டன், ரெய்னா தவிர சொல்லிக்கொள்ளும் படி வேறு ஒருவரும் விளையாடவில்லை. தோனி என்ற யானைக்கு ஒரு சறுக்கல்.

என்னை பொறுத்த வரை சீனியர், ஜூனியர் அனைவரையும் அரவணைத்து, அனைவருக்கும் வாய்ப்பளித்து இந்திய அணியை சிறந்த அணியாக மாற்றி கொண்டிருப்பதில் தோனிக்கு நிகர் தோனியே. ஆனால் ஐ.பி.எல் தான் தோனிக்கும், நமக்கும் ஏமாற்றம். சரி, உலக கோப்பையில் கண்டிப்பாக கோப்பையை கொண்டு வந்து விடுவார் என்று நம்பிக்கை எல்லோரிடமும். அதுவும் ஐ.பி.எல் இல் மிக சிறப்பாக விளையாடிய எல்லோரும் இந்த அணியிலும் இருக்கிறார்கள் என்ற சந்தோஷமும் சேர்ந்து கொண்டது.
ஆனால் தோனியின் தலைமை ஏன் இப்படி மாறியது என்று தெரியவில்லை. ஏன் இத்தனை குழப்பம் என்றும் புரியவில்லை. தேவை இல்லாமல் தோற்று விட்டோம் என்ற ஆதங்கம் தான் எல்லோரிடமும். தோனிக்கு தான் நமது அணி வீரர்களை பற்றி தெரியுமே. எல்லோரும் அனைத்து ஆட்டத்திலும் விளையாட மாட்டார்கள் என்று. எத்தனை நாள் தான் யுவராஜ் சிங்கை மட்டும் நம்ப முடியும். தோனிக்கு அடுத்த சறுக்கல்.

தோனியை பற்றி பேசும் போது, என்னால் ஷேன் வார்னே பற்றி பேசாமல் இருக்க முடியவில்லை. ஒருவருக்குள் இருக்கும் தனித்திறமையை கண்டறிவது, தட்டி கொடுத்து வேலை வாங்குவது, திறமைக்கு உரிய வாய்ப்பு கொடுப்பது, உறுதுணையாய் நின்று வெற்றிக்கு போராடுவது என்று இத்தனை பண்புகளை கொண்ட ஷேன் வார்னே தான் என்னை பொறுத்தவரை மிக சிறந்த தலைமை. ஆஸ்திரேலியா அணிக்கு கொடுத்து வைக்கவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.

ஆனால் ஷேன் வார்னே ஓரம்கட்டப்பட்டு தோனியால் முன்னே வர முடியும், . அந்த திறமை அவரிடம் இருக்கிறது. என்னை பொறுத்தவரை இந்த தலைமை இந்த அணிக்கு கண்டிப்பாக தேவை என்று எண்ண வைத்த இருவர் ஷேன் வார்னே மற்றும் தோனி. அதே நேரத்தில் இந்த தலைமை கண்டிப்பாக தேவை தானா என்று என்னை யோசிக்க வைத்த இருவர் பாண்டிங் மற்றும் கங்குலி. இந்த இருவரும் வாய் பேசுவதை கொஞ்சம்(?!?) குறைத்திருக்கலாம்.

தோனி ஷேன் வார்னை பின்னுக்கு தள்ளுவார் என்ற நம்பிக்கை உள்ள எனக்கு கீப்பிங்கில் கில்கிறிஸ்டை பின்னுக்கு தள்ளுவார் என்ற நம்பிக்கை இல்லை. அவர் கீப்பிங்கிலோ, பேட்டிங்கிலோ ஜொலிக்கவில்லை என்றாலும் பரவாயில்லை. அவர் இந்திய அணியை அரவணைத்து வெற்றிக்கு அழைத்து சென்றால் போதும். இந்திய அணி வீரர்களுக்கு அவர்களின் ஒற்றுமையை புரிய வைத்தால் போதும். பின்பு இந்திய அணியின் வெற்றிக்கு முன் அவரின் சொதப்பலான பேட்டிங் எல்லாம் நம்மை உறுத்தாது.

இருந்தாலும் இந்த இரு அடிகளும் அவருக்கே அவரை புரிய வைத்திருக்க வேண்டும். அவர் செய்த தப்புகளை உணர வைத்திருக்க வேண்டும். எந்த விமர்சனத்தையும் கண்டு கொள்ளாமல் இனி இந்திய அணியை எப்பிடி முன்னேற்றலாம் என்று யோசிப்பார் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. பொறுத்திருந்து பார்ப்போம். எனது சந்தோசம் தோனியின் மீது பாசம் கொண்ட எனது தோழிகள், தோனியை எப்போதும் தலையில் தூக்கி வைத்து ஆடும் எனது நண்பர்கள் அனைவரும் மீடியா போல் அவரை தூற்றாமல் அவரால் முடியும், அடுத்த அடுத்த வெற்றிகளை பெற்று தருவார் என்ற நம்பிக்கையில் இருக்கிறார்கள். தோனி இந்த நம்பிக்கைகளை காப்பாற்றுவாரா என்று பொறுத்திருந்து பார்ப்போம்.

என்ன தான் நம்பிக்கை இருந்தாலும் இந்திய அணி உலக கோப்பையை ஜெயிக்கவில்லை என்று நான் கவலையுடன் இருந்தால் ஏற்கனவே தோனி தோனின்னு அளப்பறை பண்ணி தன் கணவர் காதுல ஒரு chimney மாட்டுன (???) ஒருத்தவங்க இந்திய அணி தோல்வியை பற்றி கவலைப்படாமல் தோனி சீக்கிரம் இந்தியாவிற்கு வரான் என்று சந்தோசப்பட்டு கொண்டு என் வயித்தெரிச்சலை கொட்டிட்டு இருக்காங்க.

ச.ந.கண்ணனுக்கு ஒரு வேண்டுகோள். தோனியை பற்றி பெருமையாக எழுதும் பொது கொஞ்சம் பிரியா அக்காவின் கண்ணில் படாமல் பார்த்து கொள்ளுங்களேன். இப்போது என் காதிலும் chimney போடலாம் :) :) :)

Thursday, June 11, 2009

தல சொல்லை தட்டாத!

என் தல என்னையும் மதிச்சு ஒரு தொடர் பதிவுக்கு கூப்பிட்டுருக்காங்க. தல சொல்லி தட்ட முடியுமா? அதாங்க இந்த பதிவு

என் தலய ஒரு பதிவு எழுத வச்ச ச.ந.கண்ணனுக்கு ஒரு பெரிய நன்றிங்க.

உங்களுக்கு ஏன் இந்தப் பெயர் வந்தது?
எங்க அப்பாவுக்கு "லெட்சுமி" அப்பிடிங்கற பேரு ரொம்ப பிடிக்கும். அதுனால அந்த பேரு வைக்கலாம் அப்பிடின்னு முடிவு எடுக்க போறப்போ யாரோ குறுக்க புகுந்து எங்க அப்பாவ யோசிக்க வைச்சிட்டாங்க. அதாவது இந்த பேரு வச்சா "போயிட்டு வா லெட்சுமி, போறியா லெட்சுமி" அப்பிடின்னு சொல்ல வேண்டி இருக்குமாம். யாரவது "லெட்சுமிய" போன்னு சொல்லுவாங்களான்னு ரொம்ப அறிவு பூர்வமா எங்க அப்பாகிட்ட சொல்லி இருக்காங்க.

அப்புறம் என்ன "லெட்சுமி" மட்டும் வைக்காம ஏதாவது கூட சேர்த்து வைக்கலாம்னு யோசிச்சாங்க. எங்க தாத்தாவுக்கு முதல் பேத்தின்னு ரொம்ப சந்தோசமாம். அவங்க பேரு "ராஜகோபால்". அதுனால அவங்க முதல் பாதிய தூக்கி "லெட்சுமி" கூட சேர்த்து "ராஜலெட்சுமி" ஆக்கிட்டாங்க.

உங்களுக்கு உங்க பெயர் பிடிக்குமா?
அது ஏனோ தெரியல. எனக்கு "ராஜலெட்சுமி பக்கிரிசாமி" இல்ல "ராஜி" அப்பிடின்னு கூப்பிட்டா ரொம்ப பிடிக்கும். ஆனா "ராஜலெட்சுமி" அப்பிடின்னு கூப்பிட்டா அதுவும் எனக்கு ரொம்ப பிடிச்சவங்க கூப்பிட்டா ரொம்ப கடுப்பு வரும்

கடைசியாக அழுதது எப்போது?
நியாபகம் இல்லைங்களே. என்னையெல்லாம் மதிச்சி எழுத சொல்லி இருக்காங்களேன்னு பிரியா அக்காவ நினைச்சி வேணும்னா அழலாம்.

உங்களுக்கு உங்க கையெழுத்து பிடிக்குமா?
பிடிக்கும்ங்க. school படிக்கிறப்போ கொஞ்சம் extra mark வாங்கி கொடுத்ததுக்காகவது நன்றி மறக்காம இருக்கணும்.

பிடித்த மதிய உணவு?
எங்க அம்மா செஞ்ச எது வேணும்னாலும் குடுத்து பாருங்க. குறிப்பிட்டுனா தோசையும், அரிசி பருப்பு சாதமும் போதுங்க. வேற எதுவுமே வேண்டாம்.

நீங்க வேற யாருடனாவது நட்பு வெச்சுக்குவீங்களா?
கேள்வி கொஞ்சம் குழப்புது. அதுனால அடுத்த கேள்விக்கு போகலாம்.

கடல்ல குளிக்கப் பிடிக்குமா? அருவியில குளிக்கப் பிடிக்குமா?
குளிக்க பிடிக்குமான்னு கேளுங்க முதல்ல.

ஒருவரைப் பார்க்கும்போது முதலில் எதைக் கவனிப்பீர்கள்?
நாம பண்ணுற திருட்டுத்தனம் தெரிஞ்சு இருக்குமோ? எப்பிடி சமாளிக்கலாம்? அப்பிடின்னு யோசிப்பேன் அப்புறம் தான் கவனிக்கறது எல்லாம் :) :) :)

உங்க கிட்ட உங்களுக்குப் பிடிச்ச விஷயம் என்ன? பிடிக்காத விஷயம் என்ன?
பிடிச்சது - என் மேல எனக்கு இருக்கும் நம்பிக்கை
பிடிக்காதது - அது கிடக்குது கழுதை. விட்டு தள்ளுங்க. (நிறைய இருக்கு. அதான்)

இப்போ யார் பக்கத்துல இல்லாம போனதுக்கு வருந்துகிறீர்கள்?
எனது சித்தப்பா

உங்களுக்கு இதை அனுப்பிய பதிவரின் பதிவுகளில் உங்களுக்குப் பிடித்த பதிவு?
எல்லாமே பிடிக்கும். அவங்களுடைய பதிவுகள படிக்கிறப்போ ஒரு பதிவாவது அவங்கள மாதிரி எழுதுவோமா அப்பிடின்னு தோணும். அதுவும்
தந்தை மகற்கு ஆற்றும் நன்றி பதிவ ஒரு ஐம்பது தடவையாவது படிச்சிருப்பேன். இன்னும் நிறைய பேருக்கு அவங்க பதிவுகள் சென்றடையட்டும்.

பிடித்த விளையாட்டு?
விளையாட்டுனாலே ரொம்ப பிடிக்கும். பாரபட்சமே கிடையாது. சிலம்பம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும். இத விளையாட்டுன்னு சொல்ல கூடாது. இருந்தாலும் பரவாயில்லை நான் சொன்னதுக்காக இருந்துட்டு போகட்டும்.

கண்ணாடி அணிபவரா?
இந்த மாதிரி தொடர் பதிவு (அதுவும் இத்தன கேள்வி) ஒரு நாலு எழுதுனா கூடிய சீக்கிரம் போட்டுடுவேன்.

எந்த மாதிரியான திரைப்படம் பிடிக்கும்?
மொழி,மௌன ராகம் - இந்த இரு படங்களும் ஏற்படுத்திய தாக்கத்தை என்னால சொல்லவே முடியாது.அப்புறம் நமக்கு படம்னா ரொம்ப ஜாலியா, காமெடியா இருக்கணும். hostel friends கூட கூட்டமா உட்கார்ந்து பார்த்தா எந்த படம்னாலும் எங்களுக்கு ஓகே.

கடைசியாகப் பார்த்த படம்?
பசங்க - சூப்பரான படம். திரும்பி பார்க்கணும் (அதுவும் அந்த குட்டியோட "எப்புடி" கேட்கவே பார்க்கணும்)

என்ன புத்தகம் படித்துக்கொண்டு இருக்கிறீர்கள்?
என்ன இன்னும் கொஞ்சம் positive think பண்ண வைக்குற புக் - சொல்லாததும் உண்மை. எத்தன தடவை படிச்சி இருப்பேன்னு என்னால கூட சொல்ல
முடியாது.
முதல் முறை படிக்கிற புக் - Three mistakes of my life.

வீட்டை விட்டு நீங்கள் சென்ற அதிக தொலைவு?
வீட்ட விட்டுட்டு வெளியில வந்துட்டா அது எவ்வளவு பக்கமா இருந்தாலும் தூரமா தான் தெரியும்.

உங்களிடம் ஏதாவது தனித்திறமை இருக்கிறதா?
சொல்லிக்கிற மாதிரி எதுவும் இல்லைங்க.

உங்களுக்குப் பிடித்த சுற்றுலாத் தலம்?
ஊரு சுத்துறது ரொம்ப பிடிக்கும். என்ன reason தெரியாது, ஆனா ஜப்பான் போனா நல்லா இருக்கும்னு தோணும்.

எப்படி இருக்கணும்னு ஆசை?
யாருக்கும் உதவி செய்ய முடியலைனாலும் உபத்திரவம் செய்யாம இருக்கணும்னு தான் ஆசை

மனைவி இல்லாமல் செய்ய விரும்பும் காரியம்?
சின்ன பொண்ணுங்க கிட்ட கேட்குற கேள்வியா இது?

வாழ்வு பற்றி ஒரு வரியில் சொல்லுங்க?
இன்னைய வரைக்கும் ஒரு புரியாத புதிராகவே இருக்கு. எந்த நிமிஷம் என்ன நடக்கும்னே தெரிய மாட்டேங்குதே. அதுவும் எதுக்கு, எப்பிடி ஒண்ணுமே தெரிய மாட்டேங்குதே

வெட்டிபயல்னு சொல்லிக்கிட்டு வெட்டியா இல்லாம ரொம்ப நல்ல பதிவுகள போடுற ஒரு பெரிய தலய இந்த தொடர் பதிவுக்கு அழைக்கிறேன்.
ஒரு பெரிய தல நம்மள மாட்டி விட்டதுக்கு நாம ஒரு பெரிய தலய மாட்டி விட்டாச்சு. இப்போ தான் நிம்மதி!